search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுனாமி நினைவு தினம்"

    கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு தூணில் பல்வேறு தரப்பினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். #Tsunami #MemorialDay
    கடலூர்:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது.

    இதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரை யோரம் வசித்து வந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.

    கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, கிள்ளை, பரங்கிப்பேட்டை, அன்னங்கோயில், புதுகுப்பம் எம்.ஜி.ஆர். திட்டு, பில்லுமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சுனாமி பேரலை தாக்கியது.

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் நடைபயிற்சிக்கு வந்தவர்களை கடல் அலை இழுத்துசென்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுனாமியின் கோரத்தாண்டவத்தில் 610 பேர் உயிரிழந்தனர்.

    மேலும் 7 ஆயிரம் கட்டு மரங்கள், பைபர் படகுகள், விசைப்படகுகள், 4 ஆயிரம் மீன்பிடி வலைகள், 650 ஹெக்டேர் நிலங்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் சேதமடைந்தது.

    சுனாமி பேரலை தாக்கி 14-வது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்று சுனாமியால் பலியானவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்தது.

    தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி அருகே மீனவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கடற்கரைக்கு கண்களில் கண்ணீரையும், நெஞ்சத்தில் சோகத்தையும் சுமந்தபடி ஆண்கள், பெண்கள் மவுன ஊர்வலமாக பூக்கூடைகளையும், பால் குடங்களையும் ஏந்தியபடி கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் கண்ணீர் மல்க கடலில் பாலை ஊற்றி, கூடைகளில் கொண்டுவந்த பூக்களை கடலில் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    அப்போது இறந்தவர்களை நினைத்து பெண்கள் கதறித்துடித்தனர். இது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு தூண் உள்ளது. அங்கு பல்வேறு தரப்பினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கடலூர் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் அந்தப் பகுதி மீனவர்கள் சுனாமி நினைவு தினம் அனுசரித்தனர். இதையொட்டி தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். பெண்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவு தினத்தையொட்டி இன்று மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.

    விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், கூனிமேடு, கூனிமேடுகுப்பம், அனுமந்தைகுப்பம், எக்கியார்குப்பம், கீழ்புத்துபட்டு குப்பம் உள்பட 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுனாமி தாக்கியபோது ஏராளமானோர் பலியானார்கள்.

    இதையொட்டி இன்று மரக்காணம் பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மீனவர்கள் கடல் பகுதிக்கு சென்று பால் ஊற்றினர். பின்பு கடலில் மலர் தூவி கண்ணீர்அஞ்சலி செலுத்தினர். சுனாமியில் இறந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர்.

    சுனாமியின்போது காரைக்கால் பகுதியில் உள்ள பட்டனம்சேரி, கீழ் தான்குடி உள்பட 11 கிராமங்களில் உள்ள 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியானார்கள். அவர்களின் நினைவாக கடற்கரையில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

    சுனாமி தினத்தை யொட்டி கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் கலெக்டர் கேசவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அதன்பின்பு சுனாமியின்போது இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நன்டலாறு, பட்டினச் சேரி ஆகிய பகுதிகளில் அவர்களது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது பல பெண்கள் கதறி அழுதனர். இதை பார்க்க பரிதாபமாக இருந்தது. #Tsunami #MemorialDay

    சுனாமி 14-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீனவ கிராம மக்களுடன் சென்று கடலில் பால் ஊற்றி மலர் தூவி வணங்கினார். #Tsunami #MemorialDay
    நாகப்பட்டினம்:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் பயங்கர பூகம்பம் காரணமாக சுனாமி என்னும் ஆழிப்பேரவை எழுந்தது. இதனால் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மியான்மர் உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரை பகுதிகளை வாரி சுருட்டின. இதில் மொத்தம் 2½ லட்சம் பேர் பலியானார்கள்.

    தமிழகத்தில் சுனாமி பேரலைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதில் நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்து 65 பேர் இறந்தனர். மீனவர்களின் படகுகள் தூக்கி வீசப்பட்டு கடும் சேதமானது.

    இறந்தவர்களின் உடல்களை புதைக்க போதிய இடம் இல்லாததால் ஒரே குழிக்குள் 25 உடல்கள் வரை புதைக்கப்பட்டன சுனாமியில் உருக்குலைந்த நாகை மாவட்டம் மீண்டு வர பல மாதங்கள் ஆனது.

    இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. சுனாமியால் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், மற்றும் உற்றார்-உறவினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கும் இன்னும் ஆறாத வடுவாகவே உள்ளது.

    சுனாமியின் கோரத்தாண்டவத்தில பலியான வர்களின் நினைவாக நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர பகுதிகளில் நினைவிடம் அமைக்கப் பட்டுள்ளது.

    நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, தரங்கம்பாடி, பூம்புகார், சின்னகுடி, பொறையாறு, சந்திரபாபு ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவ கிராம மக்கள் இன்று சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நாகையில், மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மவுன ஊர்வலமாக சென்றனர். பின்னர் கடலில், பாலை ஊற்றி, சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறை மீனவர் கிராமத்தில் இன்று 14-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீனவ கிராம மக்களுடன் கடலுக்கு சென்று கடலில் பால் ஊற்றி மலர் தூவி வணங்கினார். பின்னர் சுனாமி நினைவிடத்திற்கு வந்து அங்கு மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

    நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் சுரேஷ்குமார், எஸ்.பி.விஜயகுமார், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் இன்று பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மவுன ஊர்வலம் நடத்தினர். இதில் அரசியல் கட்சியினர், வணிகர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  #Tsunami #MemorialDay
    14-வது சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமியால் உயிர்களை பறிகொடுத்த சொந்தங்கள் கடற்கரை பகுதிகளில் அஞ்சலி செலுத்தினர். #Tsunami #MemorialDay
    கடல்... உலகெங்கும் வியாபித்து இருக்கும் பெரிய நீர்நிலை. எப்போதும் ஓய்வெடுக்காமல் உழன்றுகொண்டே இருக்கும். நீலக்கடலில் இருந்து எழும் வெள்ளை நிற அலை, இடைவிடாது கரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் அழகைக் காண குவியும் மக்களின் எண்ணிக்கைக்கு கடற்கரை மணலில் அவர்கள் பதியவிட்டு செல்லும் காலடித்தடங்களே சாட்சி. இப்படி, ரசிக்க மட்டுமே என்று இருந்த கடல், ஆபத்தானது என்பதை உணர்த்திய ஆண்டு 2004.

    14 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 26-ந் தேதி அதிகாலை நேரத்தில், இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி என்ற ஆழிப்பேரலை கடல் அரக்கனாய் விஸ்வரூபம் எடுத்து, கடற்கரையோர மக்களையும், அவர்களின் உடைமைகளையும் வாரிச் சுருட்டிச் சென்ற கொடிய நாள்.

    சுனாமி கடல் அரக்கனின் கோரத்தாண்டவத்துக்கு இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, மலேசியா, மாலத்தீவு, மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில், கடற்கரையோரம் வசித்த 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பலியானார்கள். தமிழகத்தில் மட்டும் 7,941 பேர் மாண்டு போனார்கள். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6,039 பேர் பலியானார்கள். கன்னியாகுமரியில் 798 பேர் இறந்துபோனார்கள். கடற்கரையோரம் குவிந்து கிடந்த பிணங்களை ஒரே குழிக்குள் போட்டு புதைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. அன்று ஒலிக்கத் தொடங்கிய மரண ஓலம் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் ஓய்ந்த பாடில்லை.

    “ஆண்டொன்று போனால், வயதொன்று போகும்” என்று சொல்வார்கள். அன்று... சிறுவர்-சிறுமியாய் மாண்டுபோனவர்கள், இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் இளம் வயதினராய் வலம் வந்திருப்பார்கள். அன்றைக்கு இளம் வயதில் இருந்தவர்கள், இன்று.. திருமணம் முடிந்து குடும்பமாய் பிள்ளைகளோடு வாழ்ந்து மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், அன்றைக்கு ஆழிப்பேரலையின் கோரப் பசிக்கு இரையானவர்களின் புகைப்படங்கள் இன்றைக்கு அவர்களது வீடுகளில் சுவற்றில் நினைவுச் சின்னமாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதைப் பார்க்கும் போதெல்லாம் மரித்துப்போனவர்களின் ரத்த சொந்தங்களுக்கு கண்களில் கண்ணீர் பொங்கி நிற்கிறது.



    2004-ம் ஆண்டு நடந்த இந்த பெரிய இயற்கை பேரிடருக்கு பிறகு, எப்போதாவது இடையிடையே ‘சுனாமி’ என்னும் அரக்கன், கடல் கொந்தளிப்பாக உருவெடுத்து கரையோர மீனவர்களை மிரட்டிக் கொண்டே இருக்கிறான். 2005-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால், கடல் கொந்தளித்து தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி பீதியை கிளப்பியது. மீண்டும் அதே ஆண்டு மார்ச் 28-ந் தேதி, இந்தோனேசியா அருகே ஏற்பட்ட கடுமையான பூமி அதிர்ச்சி காரணமாக சுனாமி பீதி ஏற்பட்டது. தமிழகத்தில் கடலோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த பூகம்ப தாக்குதலில் இந்தோனேசியாவில் 2 ஆயிரம் பேர் பலியானார்கள். இப்படி, ஆழிப்பேரலையின் மிரட்டல்கள் அவ்வப்போது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

    எனவே மக்களின் மனங்களில் சுனாமி ஏற்படுத்திய வடு இன்னும் மறைந்தபாடில்லை. 14-வது சுனாமி நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உயிர்களை இழந்த சொந்தங்கள், கடல் தாயிடம் வேண்டி முறையிட்டு கனத்த இதயத்தோடு கடற்மணல் பரப்பில் அஞ்சலி செலுத்துகின்றனர். கடலில் பால் ஊற்றியும் பிரார்த்தனை செய்கின்றனர். இனியும் இதுபோன்ற கோரத் தாக்குதல்கள் தொடர வேண்டாம் என்பதே அவர்களுடைய வேண்டுதலாக உள்ளது.

    எந்தவொரு கவலைக்கும் சரியான மருந்து காலத்திடம் தான் இருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் மனதில் சுனாமி ஏற்படுத்திய ஆறாத வடுவையும் காலம் என்ற மருந்து விரைவாக ஆற்றட்டும் என்று இறைவனிடம் நாம் வேண்டுவோம்.  #Tsunami #MemorialDay
    ×